கர்நாடகாவில் ஏற்கனவே 3 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 14 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
குமாரசாமி அரசு மீது அதிருப்தி அடைந்த காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் வழங்கினர். மேலும் 2 சுயேட்சை உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் வழங்கியதால் கர்நாடக அரசியலில் உச்சகட்ட குழப்பம் நிலவியது. சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால், முதலமைச்சர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை அன்று அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார். முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடியூரப்பா, சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் ரமேஷ் குமார், ராஜினாமா கடிதம் வழங்கிய அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேரை தகுதி நீக்கம் செய்வதாக அதிரடியாக அறிவித்தார்.