விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அடுத்த 14 நாட்கள் முயற்சிப்போம்: 'இஸ்ரோ'சிவன்

சந்திரயான் 2 விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அடுத்த 14 நாட்கள் முயற்சிப்போம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்

நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கும் முயற்சியில், எதிர்பாராத விதமாக சந்திரயான் விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்பிட்டர் தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் லேண்டருடன் தொடர்பு கொள்ள அடுத்த 14 நாட்கள் முயற்சிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் ஆர்பிட்டரின் ஆயுட்காலம் ஓராண்டாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகளவு எரிபொருள் இருப்பதால் ஏழரை வருடங்கள் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இக்கட்டான சூழ்நிலையில் இஸ்ரோவுக்கு துணை நின்ற பிரதமர் மோடிக்கும் நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் இஸ்ரோ வரலாறு சாதனை படைத்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். உலகின் எந்த நாடும் முயற்சிக்காத நிலவின் தென் துருவப் பகுதிக்கு விண்கலத்தை ஏவ அல்லும் பகலும் பாடுபட்ட இஸ்ரோவின் முயற்சி பாராட்டத் தக்கது என்றும், புதுநம்பிக்கையுடனும், ஊக்கத்துடனும் செயல்பட்டு வெற்றிபெறவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தோல்விகளை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி விரைவில் சந்திரனை அடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

Exit mobile version