மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் புதிய தொலைக்காட்சி சேனல்

தமிழக மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு கல்விக்கென புதிய பிரத்யேக தொலைக்காட்சி விரைவில் துவங்க உள்ளது அதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்……

தமிழகத்தில் மாணவர்களிடம் கல்வி திறனை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில், கல்விக்கென பிரத்யேக சேனல் கடந்த மாதம் 29 ஆம் தேதி துவங்கப்பட்டு தற்போது சேனலின் சோதனை ஓட்டம் அரசு கேபிளில் சேனல் நம்பர் 200 ல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து கல்வி தொலைக்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜெரோம் தெரிவிக்கையில்

கல்வி தொலைக்காட்சியின் முழு நேர ஓட்டத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் துவங்க உள்ளார். வணிக நோக்கோடு செயல்படும் பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடுகையில் கல்விக்கென நிகழ்ச்சிகள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது தமிழக அரசின் இந்த கல்வி தொலைக்காட்சி

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலக கட்டிடத்தில் கல்வி தொலைக்காட்சியின் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. கல்விக்கான முழு நேர பிரத்யேக சேனலுக்கென அரசு 1 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கேமராக்கள், படப்பிடிப்பு கருவிகள் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்வி துறையின் செயல்பாடுகள், மானியங்கள், நலத்திட்ட உதவிகள், பாடத்திட்டங்கள் குறித்து விளக்கும் புதிய முறைகள் மற்றும் திறன்களை வெளிப்படுத்தும் ஆசிரியர்களை பற்றிய நிகழ்ச்சிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

எல்.கே.ஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கென படைப்பாற்றல் மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், போட்டி தேர்வுக்கான பயிற்சிகள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு வழங்குவதற்கான நிகழ்ச்சிகள், பள்ளிக்கல்வி துறையின் அறிவிப்புகள் என 15க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறவுள்ளன. மேலும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு போன்ற பயிற்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் அறநெறி குறித்த வகுப்பு, சாலை போக்குவரத்து விதிகள், விளையாட்டு பயிற்சிகள், தொழிற்கல்வி உள்ளிட்ட திறமைகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழக அரசின் இந்த கல்வி தொலைக்காட்சியானது கல்வி தரத்தில் பெரும் புரட்சியாக உலகளாவிய சாதனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Exit mobile version