புதிய மோட்டார் வாகனச் சட்ட விதிமுறைகளுக்குப் பொதுமக்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது புதிய மோட்டார் வாகனச் சட்ட விதிமுறைகளுக்குக் கட்சி வேறுபாடின்றி அனைத்துப் பிரிவினரும் ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.
கடுமையான அபராதத் தொகையால் முதலில் அதிர்ச்சியடைந்த மக்கள், எல்லாவற்றையும் விட மனித உயிர்களின் பாதுகாப்பு முதன்மையானது என உணர்ந்துகொண்டதால் இப்போது சட்டத்தை வரவேற்பதாகத் தெரிவித்தார்.
புதிய மோட்டார் வாகனச் சட்டத்தைப் பல மாநிலங்கள் எதிர்ப்பதாகச் சிலர் வதந்திகளைப் பரப்புவதாகவும் நிதின் கட்கரி குறிப்பிட்டார். சாலை விதிமீறலுக்கு அபராதமாகப் பெறப்படும் தொகையை மாநிலங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகையைக் கடுமையாக உயர்த்தியிருப்பதன மூலம் விபத்துக்கள் பெருமளவில் குறையும் என நம்புவதாகவும் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.