நீட் தேர்வுக்கு எதிராக குடியரசு தலைவரின் ஒப்புதலோடு சட்டம் இயற்றுவது என்பது சட்ட நடைமுறையில் இல்லாத ஒன்று என கருத்து தெரிவித்துள்ள சட்ட வல்லுநர்கள், புதிய சட்டம் கொண்டு வரப்படும் என திமுக அரசு கூறியிருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என தெரிவித்துள்ளனர்.
ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதே முதல் கையெழுத்து என தேர்தலின் போது ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்த பிறகும் நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசு, ஏ.கே.ராஜன் குழு அமைத்து கருத்துக் கேட்பது போன்ற நாடகங்களை அரங்கேற்றி வந்தது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை கொள்கை விளக்க குறிப்பில், நீட் தேர்வுக்கு எதிராக குடியரசு தலைவரின் ஒப்புதலோடு சட்டம் இயற்றப்படும் என திமுக அரசு குறிப்பிட்டுள்ளது. ஆனால், நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர் சேர்க்கையில் வேண்டுமானால் தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை கொண்டு வரலாமே தவிர, நீட் தேர்வை ரத்து செய்வது போன்ற சட்டங்களை மாநில அரசு கொண்டுவருவது கேள்விக்குறி தான் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக, மாநில அரசு சட்டம் இயற்றினால் அந்த சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைப்பது சந்தேகமே என்று மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன் கூறியுள்ளார்.
நீட் தேர்வு விவகாரம் குறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்கும் அதிகாரம் மருத்துவ கவுன்சிலுக்கு மட்டுமே உள்ளது என்றும், மாநில அரசு சட்டம் இயற்றினாலும் அதன் மூலம் எந்த பலனும் கிடைக்காது எனவும் மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கொள்கை விளக்க குறிப்பில் நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என திமுக அரசு கூறியிருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.