தீயணைப்புத் துறை, மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டதால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.
சென்னை – மதுரவாயல் பைபாஸ் சாலையில், வானகரத்தில் சினிமா படப்பிடிப்புக்கு செட் அமைக்கும் நிறுவனத்தில் மின்கசிவு ஏற்பட்டு தீ பற்றியது.
உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால், அருகே இருந்த முன்னாள் அமைச்சர் பென்ஜமின் அலுவலகத்திற்கும் தீ மளமளவென பரவியது.
இந்த நிலையில், தீயணைப்பு நிலையத்தில் போதிய தண்ணீர் இல்லாததால் குடிநீர் வழங்கல் வாரியத்திடம் தண்ணீர் கேட்டதாகத் தெரிகிறது.
இதனால், தனியார் மூலம் தண்ணீர் ஏற்பாடு செய்து, இரண்டு மணி நேரம் தாமதமாக தீயை அணைக்க தொடங்கினர்.
ஏழு மணி நேரம் ஆகியும் தீ அணைக்கப்படவில்லை.
மெத்தனப்போக்கோடு தீயணைப்புத்துறையினர் செயல்பட்டதால், முன்னாள் அமைச்சர் பென்ஜமின் அலுவலகத்தில் உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று முறை மின்கசிவு ஏற்பட்டதால் இது தொடர்பாக மின் அலுலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மின்சார வாரியம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததே தீ விபத்து ஏற்பட காரணம் என்று புகார் எழுந்துள்ளது.