மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை மாற்றியமைத்த மத்திய அரசு, நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
நீட் ஆள்மாறாட்டம் வழக்கு தொடர்பாக, மருத்துவ மாணவர்களின் கைரேகை பதிவுகளை சிபிசிஐடியிடம் வழங்க நீதிபதி கிருபாகரன் அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு முன், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, பல்வேறு திட்டங்களை மாற்றியமைத்து வரும் மத்திய அரசு நீட் தேர்வை ஏன் திரும்ப பெறவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, நீட் பயிற்சி மையங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அதே போல, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் கைரேகைகள் இன்று சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.