நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், மாணவி அபிராமி, அவரது தந்தை ஆகியோரை சிபிசிஐடி காவல்துறையினர் விடுவிப்பு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பானின், தந்தை முகமது ஷபியிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முகமது ஷபி வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் மருத்துவனை நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. முகமது ஷபியின் சகோதரர்கள் 6 பேரும் மருத்துவர்களாகப் பணியாற்றி வரும் நிலையில், தனது மகனை எப்படியாவது மருத்துவராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஆள்மாறாட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த உடன், கைது பயத்தில் மாணவன் இர்பான், மொரிஷியசிற்கு தப்பிச் சென்றார். இந்த நிலையில், முகமது ஷபியை கைது செய்துள்ள சிபிசிஐடி காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மொரிஷியஸ் தப்பி சென்ற இர்பானை பிடிக்க சிபிசிஐடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், உண்மைத் தன்மை கண்டறியப்பட்டதால், கைது செய்யப்பட்ட மாணவி அபிராமி, அவரது தந்தை ஆகியோரை சிபிசிஐடி காவல்துறையினர் விடுவித்து உள்ளனர். தடயவியல் துறையில் ஆலோசனை பெற்றே மாணவியும், அவரது தந்தையும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

Exit mobile version