அரசு இடத்தை உடனடியாக காலி செய்ய நேஷனல் ஹெரால்டு வழக்கில் உத்தரவு

நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வழக்கில், அரசு இடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் செயல்படு வரும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் அரசு நிலத்தை காலி செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்ற ஒரு நீதிபதி அமர்வு கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பினை எதிர்த்து அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனம் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ராஜேந்திர மேனன், வி.கே.ராவ் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை கடந்த 18 ம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதன் படி அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனம் அரசு நிலத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த இடம் குத்தகை விதிமுறைகளுக்கு மாறாக வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டு வந்ததால் கடந்த ஆண்டு அக்டோபர் 30 ம் தேதி குத்தகை ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த முகவரியில் இருந்து தான் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட 3 பத்திரிகைகள் வெளிவருவதாக அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனம் முன் வைத்த வாதம் ஏற்கப்படவில்லை. நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை கடந்த 1937 ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version