அமேசான் காட்டுத் தீ, உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அமேசான் காட்டு தீக்கு எதிராக களத்தில் இறங்கிப் போராடத் தயாராகிவிட்டனர் முரா இன மக்கள். யார் இந்த முரா இன மக்கள் ? அவர்கள் ஏன் போராட வேண்டும் ?
அமேசான் மழைக்காடுகளைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற குரல் உலகம் முழுவதும் ஒலித்து வருகிறது. புவியின் நுரையீரலாக கருதப்படும் இந்த அமேசான் காடு, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதற்கு மனிதர்கள்தான் பெரிய காரணம் என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அமேசானில் எரியும் தீ, மரங்கள், செடி கொடிகள், பறவைகள், விலங்கினங்கள் போன்றவற்றுடன், அங்கு வாழும் பழங்குடிகளையும் சேர்த்து விழுங்கி வருகிறது. பிரேசிலின் பாதுகாக்கப்பட்ட மழைக்காடுகளை உள்ளடக்கிய அமேசான் மாகாணத்தில், பழங்குடியின மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் முரா பழங்குடியினர். அந்தப் பகுதியில் 18 ஆயிரம் முரா மக்கள் வாழ்ந்துவருவதாக தரவுகள் தெரிவிக்கிறது. ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறங்களை உடல் முழுவதும் பூசிக்கொண்டு எப்போதும் வில்லுடன் இருப்பதுதான் இவர்களின் அடையாளம்.
அமேசான் மழைகாடுகளில் ஏற்பட்ட பெரும் தீ, அடர்ந்த வனப்பகுதிக்கு உள்ளே வாழும் பழங்குடிகளின் இருப்பிடத்தையும் விட்டுவைக்கவில்லை. இதனால் அங்கு வாழும் பழங்குடிகள் தங்கள் நிலத்தை இழந்து தவித்துவருகின்றனர். யாரையும் நம்பி இருக்காமல், காட்டுத் தீக்கு எதிராகவும், இதற்குக் காரணமானவர்களுக்கு எதிராகவும், தாங்களே களத்தில் இறங்கிப் போராடத் தயாராகிவிட்டனர் இந்த முரா இன மக்கள்.
இங்குள்ள மரங்கள், செடி கொடிகளுக்கும் உயிர் உள்ளது. அவை அனைத்தும் உயிர் வாழ வேண்டும். ஒவ்வொரு நிமிடமும், இந்தக் காடு தன் இறுதி நாளை நோக்கி சென்றுகொண்டிருப்பது மிகவும் வேதனையாக உள்ளது. காலநிலை மாற்றத்தை எங்களால் உணர முடிகிறது. இந்த உலகத்துக்குக் காடுகள் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்குக் காடுகள் தேவை, எங்கள் எதிர்கால சந்ததியினருக்கு காடுகள் தேவை” என கூறுகின்றனர் முரா இன மக்கள். மேலும், எங்களைப் பொறுத்தவரை, இது மிகப்பெரும் அழிவு. எங்களுக்கு எதிராகச் செய்யப்படுவது பெரும் கொடுமை. எங்கள் இறுதித் துளி ரத்தத்தை கொடுத்து போராடியாவது, இந்தக் காட்டை காப்பாற்றுவோம்” என கூறுகின்றனர் இந்த பழங்குடியின மக்கள்.
ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தற்போது வரை அமேசான் காடுகளில் 9 ஆயிரத்து 500 புதிய காட்டுத்தீ சம்பவங்கள் நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அங்கு எரியும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாத பிரேசில் அரசு, சர்வதேச நாடுகளின் கண்டனங்களை எதிர்கொண்டுள்ளது. அமேசானில், மூன்று கால்பந்தாட்ட ஆடுகளம் அளவுள்ள நிலப்பரப்பு, ஒவ்வொரு நொடியும் அழிந்து வருவதாக நிபுணர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.