பினாமி பெயரில் கல்கி விஜயகுமார் வாங்கி குவித்த பல கோடி சொத்துகள் முடக்கம்

 பினாமி பெயரில் கல்கி விஜயகுமார் வாங்கி குவித்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கல்கி பகவான் விஜயகுமார் யார் அவருக்கு எப்படி எவ்வளவு சொத்துக்கள் வந்தது என்பது குறித்த சிறப்பு தொகுப்பு

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதப்பாளையத்தில் கல்கி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தை கல்கி விஜயகுமார் என்று கூறப்படும் விஜயகுமார் என்பவர் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். விஜயகுமார் தன்னை ‘விஷ்ணுவின் அவதாரம்’ என்று கூறி அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கி வருகிறார். முதலில் யார் இந்த கல்கி விஜயகுமார் என்று பார்க்கலாம்.

1949 ஆம் ஆண்டு தமிழகத்தின் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள நத்தம் பகுதியில், ஆந்திராவை பூர்விகமாக கொண்ட ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார் விஜயகுமார். தனது 6 வயதில் குடும்பத்துடன் சென்னை வந்த அவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே முடித்தார்.ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அவர், ஜே.கே வின் அனைத்து தியானக் கூட்டங்களுக்கும் ஒன்று விடாமல் செல்ல ஆரம்பித்தார். பின்னர் ஒரு நாள் தான் விஷ்ணுவின் அவதாரம் என்றும் தன்னை கடவுள் என்றும்  அறிவித்தார். சாதாரண பொதுமக்களில் ஆரம்பித்து திரை நட்சத்திரங்கள் வரை  அனைவரும் கல்கி பகவான் விஜயகுமாரின் சீடர்கள் ஆனார்கள்.

இந்த நிலையில் தான் இவர் பல கோடிகளில் புரள ஆரம்பித்தார். அதை வைத்து தான் சித்தூரில் கல்கி ஆசிரமத்தை காட்டினார். இந்த நிலையில், கல்கி ஆசிரமம் பெயரில் பல சொத்துகள் வாங்கி இருப்பதாகவும், கட்டுமான துறை மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிலும் ஏராளமான முதலீடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், வருமான வரித்துறையினர் கடந்த அக்டோபர் மாதம் கல்கி ஆசிரமம் சம்பந்தப்பட்ட 40 இடங்களில் சோதனை நடத்தியதில், 800 கோடி ருபாய் வருவாய் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும்   88 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.5 கோடி வைரங்களும், சில ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கல்கி விஜயகுமார், அவரது மகன் கிருஷ்ணா, மருமகள் பிரீத்தா உள்ளிட்டோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான ஆந்திர மாநிலம் கள்ளிவெட்டு பகுதியில் ஒன்னெஸ் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருவதும், இந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றி வருபவர்கள் பெயரில் தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களின் பல்வேறு இடங்களில் 907 ஏக்கர் பரப்பளவுள்ள சொத்துகள் வாங்கி குவித்திருப்பதும் தெரியவந்தது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சொத்துகள் வாங்கி இருப்பதும், ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில்  400 ஏக்கர் நிலம் வாங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.எந்தெந்த இடங்களில் பினாமி பெயரில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டு அவற்றை முடக்கம் செய்து வருமான வரித்துறையின் பினாமி தடுப்புப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்
 

Exit mobile version