மோட்டார் வாகனச் சட்டத்தில் மத்திய அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தன.
புதிய சட்டத்திருத்தத்தின் படி போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு ஏற்கனவே இருந்த அபராதம், மற்றும் தண்டனை தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கான அபராதத் தொகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாகவும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்குபவர்களுக்கான அபராதத் தொகை 500 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிவேகமாக கட்டுப்பாடின்றி வாகனங்களை இயக்குபவர்களுக்கு 1000 ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும். மேலும் ஆபத்தை விளைவிக்கும் வகையில், வாகனம் ஓட்டுபவர்களுக்கு 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு சிறைத்தண்டனையும், இரண்டாவது முறை தவறு செய்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால் பெற்றோருக்கு 25 ஆயிரம் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும்12 மாதங்களுக்கு மோட்டார் வாகனத்திற்கான பதிவு ரத்து செய்யப்படும். ஓட்டுநர் உரிமம் காலாவதியான நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் புதுப்பிக்காவிட்டால், மீண்டும் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.