பாதுகாப்பான சாலை பயணத்தை உறுதி படுத்தும் வகையில், சாலை விதிகளை மீறுபவர்களுக்கும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கும், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் கொண்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா காலாவதியான நிலையில், அதை மத்திய அரசு திருத்தங்களுடன் மீண்டும் கொண்டு வந்துள்ளது. போதையில் வாகனம் ஓட்டுதல், சிறார் வாகனம் ஓட்டுதல், உரிமம் இல்லாமல் ஓட்டுதல், அதிவேக பயணம், அதிக சரக்குகளுடன் பயணம் உள்ளிட்ட விதிமீறல்களுக்கு அபராதத்தை கடுமையாக அதிகரிக்கவும் இம்மசோதா வழிவகுக்கிறது.
அதன்படி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். அதிவேகமாக செல்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரையிலும், காப்பீடு இல்லாமல் செல்பவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும் அபராதமாக விதிக்க இம்மசோதா வழி செய்கிறது. ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதம் உரிமம் நிறுத்திவைப்பு ஆகிய தண்டனை வழங்கவும் இம்மசோதா வழிவகுக்கிறது. பொதுவான விதிமுறைகளை மீறுபவர்களுக்கான அபராதம், 100 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.
மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா கடந்த மக்களவையிலேயே நிறைவேற்றப்பட்டுவிட்டாலும், மாநிலங்களவையில் நிலுவையில் இருந்தது. இதனால் அம்மசோதா காலாவதியானது. இந்நிலையில், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இந்த மசோதாவை சட்டமாக்கும் முயற்சியை மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது.