உலகின் மிக சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் எதுன்னு தெரியுமா?

உலகின் மிக சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் எது? எந்த நாட்டின் பாஸ்போர்ட் இருந்தால் மிக எளிதாக பிற நாடுகளிடம் விசா பெற முடியும்? – என்ற பட்டியல் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

ஹென்லி அண்டு பார்ட்னர்ஸ் – என்ற நிறுவனம், உலக நாடுகளில் எந்த நாட்டின் பாஸ்போர்ட் அதிக சக்தி வாய்ந்தது? – என்ற ஆய்வை ’ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றது.

குறிப்பாக எந்த நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை பிற நாடுகள் அதிகமாக மதித்து முன்னுரிமை கொடுக்கின்றனவோ, அந்த நாடுகளின் பாஸ்போர்ட்டுகளே இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்க முடியும்.
 
அந்த வரிசையில் 2020ஆம் ஆண்டுக்கான ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ்சில் முதல் இடத்தை ஜப்பான் பெறுகின்றது. ஜப்பான் நாட்டின்  பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்களால் விசா இல்லாமலோ, அல்லது நேரில் சென்று விசா பெற்றோ 191 நாடுகளில் நுழைய முடியும் என்ற காரணத்தால் ஜப்பானுக்கு இந்த முதல் இடம் கிடைத்துள்ளது.
 
190 நாடுகளுக்குள் எளிதில் நுழைய வகை செய்யும் சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடம் வகிக்கின்றது. இப்படியாக முதல் இரண்டு இடங்களை ஆசிய நாடுகளே பெற்றுள்ள நிலையில், 189 நாடுகளுக்குள் எளிதாக
நுழைய வாய்ப்பளிக்கும் ஜெர்மனி நாட்டின் பாஸ்போர்ட் மூன்றாவது இடத்தையும், 188 நாடுகளுக்குள் செல்ல வாய்ப்பளிக்கும் இத்தாலி, பின்லாந்து ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் நான்காவது இடத்தையும் பெற்று உள்ளன.
 
உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், கீரிஸ், நார்வே ஆகிய நாடுகள் 8ஆவது இடத்தையே பெற்றுள்ளன. 58 நாடுகளுக்குள் எளிதில் நுழைய வாய்ப்பளிக்கும் இந்திய பாஸ்போர்ட்டுகள் இந்தப் பட்டியலில் 84ஆவது இடத்தை
வகிக்கின்றன.
 
இந்தப் பட்டியலில் கடைசி மற்றும் 107ஆவது இடத்தை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது. இந்த நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து 26 நாடுகளுக்குள் மட்டுமே எளிதாக நுழைய முடியும். 32 நாடுகளில் மட்டுமே எளிதில் நுழைய வாய்ப்பளிக்கும் பாகிஸ்தானின்
பாஸ்போர்ட்டு, கடைசியில் இருந்து 4ஆவது இடம் அல்லது 104ஆவது இடத்தை சோமாலியாவுடன் பகிர்ந்து கொள்கிறது என்பது தான் பாஸ்போர்ட் செய்தித்தொகுப்பின் கடைசி தகவல் .
 

Exit mobile version