அதிமுக ஆட்சியில் வழங்கியதை போல அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் நல வாரியங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அதிமுகவை பொறுத்தவரை மக்கள் நலனே முக்கியமானது என்று கூறியுள்ளார்.
17 அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் 14 நலவாரியங்களை சேர்ந்த 35 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டதைப் போன்று, அத்தியாவசிய பொருட்கள், உணவுத்தொகுப்பு மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை தற்போதைய அரசு உடனே வழங்க வேண்டுமென கூறியுள்ளார்.
ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் அனைவருக்கும் சமூக கூடங்கள் அமைத்து உணவு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ள அவர், ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்தால் மட்டுமே இறப்பு விகிதத்தை குறைக்க முடியும் என்றும்,
அதிமுக ஆட்சியைப் போல போர்க்கால நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்தால் மட்டுமே சமூக பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.