வடசென்னையை கலங்கடித்த கும்பல் ; பழிதீர்க்க வந்த போது சிக்கிய குற்றவாளி!

ஊரடங்கு நேரத்தை சாதகமாக பயன்படுத்தி, திருட்டு பைக்கில் வலம் வந்து, வடசென்னையில் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளின் உதவியோடு காவல்துறையினர் கைது செய்தனர். கொரோனா பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த மக்கள் வெளியே வர ஆரம்பித்தனர். திருடர்களுக்கு இதுதானே வேண்டும். ஆம், வெறிச்சோடிய வடசென்னை பகுதிகளில், மக்கள் நடமாட்டம் சற்று அதிகரிக்கவே, இதனை பயன்படுத்திய வழிப்பறி கும்பல், புளியந்தோப்பு, ஓட்டேரி, வியாசர்பாடி, செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில், தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்தது.

கடந்த 8 ஆம் தேதி பேசின்பாலம் பகுதியில் ஒருவரை கத்தியால் தாக்கி, 6 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றது அந்த கும்பல். அடுத்த நாளே, புளியந்தோப்பு பகுதியில், சாலயில் நடந்து சென்றவரை கத்தி முனையில் மிரட்டி, பணம் பறித்துச் சென்றது. இதே போல், எம்கேபி நகர், ஓட்டேரி பி.வி காலனியில் கொள்ளையில் ஈடுபட்ட அந்த கும்பல், செம்பியம் பகுதியில் தனியார் மருந்தகத்தின் பூட்டை உடைத்து, 70 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது. அதற்கு மறுநாள், ஓட்டேரி பகுதியில் ஒருவரிடம், கத்தியை காட்டி மிரட்டி, 11 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஒன்றை பறித்துச் சென்ற சம்பவம், காவல்துறையினருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது. வழிப்பறி கும்பலின் அட்டகாசம் அதிகரித்த நிலையில், அவர்களை பற்றிய தகவல்களை சேகரிக்க தொடங்கியது காவல்துறை. எம்கேபி நகர் காவல் உதவி ஆணையராக பதவியேற்றுள்ள ஹரிக்குமார் தலைமையில், தனிப்படை ஒன்று உருவாக்கப்பட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

குற்றச்செயல்கள் இரவு நேரத்தில் நடைபெற்றதால், குற்றவாளிகளின் முகம் தெளிவாக தெரியவில்லை. அதே சமயம், அனைத்து சம்பவங்களிலுமே, வெள்ளை நிற உயர்ரக இருசக்கர வாகனத்தில் வந்து கொள்ளை அடித்ததை காவல்துறையினர் கவனித்தனர். இதையே இந்த வழக்கில் கிடைத்த துப்பாக வைத்து, காவல்துறையினர் வேட்டையை துவக்கினர். திருந்திய பழைய குற்றவாளி ஒருவரின் மூலமாக, ஓட்டேரியை சேர்ந்த மதன் மற்றும் அவனது கூட்டாளிகள் இணைந்து, இந்த தொடர் வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுப்பட்டதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மதனை பிடிக்க திட்டமிட்ட தனிப்படையினர், கடந்த 15 ஆம் தேதி இரவு காசிமேட்டில் மதன் இருப்பதை தெரிந்துகொண்டனர். அவனை பிடிக்க காசிமேடு சென்ற போது, முன்விரோதம் காரணமாக புருசோத்தம்மன் என்பவரை தீர்த்து கட்டுவதற்காக மதன் கும்பல் பெட்ரோல் வெடிகுண்டு, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களோடு இருந்ததை கண்டு, அவர்கள் அனைவரையும் பிடிக்க முயன்றனர். அப்போது, முக்கிய குற்றவாளி மதன் சிக்கிக் கொள்ள, மற்றவர்கள் தப்பி விட்டனர். மதனிடம் நடத்திய விசாரணையில், நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டான். ஊரடங்கு நேரத்தில், வடசென்னையில் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு, 4 லட்சம் ரூபாய் வரை சேர்த்தது மட்டுமல்லாமல், புளியந்தோப்பு பகுதியில் உயர்ரக வாகனத்தை திருடி, அந்த வாகனத்தின் மூலமே வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மதனை கைது செய்து சிறையில் அடைத்த தனிப்படையினர், அவனுக்கு உடந்தையாக இருந்தவர்களை பிடிக்க ஆந்திரா விரைந்துள்ளனர். திருட்டு வாகனம் மூலம் வழிப்பறி செய்த கும்பலை, அந்த வாகனம் மூலம் கிடைத்த துப்பை வைத்தே பிடித்ததோடு, ஒரு கொலையையும் தமிழக காவல்துறையினர் தடுத்துள்ளனர். தமிழக காவல்துறையினரின் திறமைக்கு, இதுவும் ஒரு சான்றே…

Exit mobile version