திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆண்டியப்பனூர் அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி வீரமணி பார்வையிட்டு மலர் தூவி வரவேற்றார்.
ஆண்டியப்பனூர் நீர்த் தேக்கத்தின் முழு கொள்ளளவான 8 மீட்டர் உயரம், கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையினால் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் முழுவதுமாக நிரம்பியது. அணையில் இருந்து வெளியாகும் உபரி நீர் ஆண்டியப்பனூர், இருனாப்பட்டு, குரிசிலாப்பட்டு உள்ளிட்ட 14 ஏரிகள் வழியாக ஊத்தங்கரையில் உள்ள பாம்பாறு அணையை அடைகிறது.
இதன் மூலம் 5 ஆயிரத்து 25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில், ஆண்டியப்பனூர் அணைப்பகுதியில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை அமைச்சர் கே.சி. வீரமணி ஆய்வு மேற்கொண்டார்.