கழுத்தில் துளையிடப்பட்டு சுவாசித்து வரும் இளம்பெண்ணின் மேல்சிகிச்சைக்கு தமிழக அரசு நிச்சயம் உதவி செய்யும் என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உறுதியளித்துள்ளார்.
நாகை மாவட்டம் வாய்மேடு மன்னாடிநகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் சிந்து. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருச்சி சமயபுரம் கோயிலுக்கு சென்ற போது யானை தாக்கியதில் மூச்சுக்குழாய் மற்றும் உணவுக்குழாயில் காயம் ஏற்பட்டது. இதனால் மூக்கு வழியாக சுவாசிக்க முடியாமல் சிந்து சிரமம் அடைந்தார்.
சுவாசிப்பதற்காக அவரது கழுத்தில் பிரத்யேக துளையிடப்பட்டது. கழுத்தில் துளையிடப்பட்டதால் சிந்துவால் பேச இயலவில்லை. சிந்துவின் மருத்துவ செலவுக்கு அவரது குடும்பத்தினர் இதுவரை 10 லட்ச ரூபாய் செலவு செய்துள்ள நிலையில், மேற்கொண்டு மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வந்தனர்.
இதையறிந்த கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சிந்துவின் வீட்டுக்கு நேரில் சென்று அவரை சந்தித்தார். சென்னை அல்லது டெல்லியில் மேல் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.