60,000 ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 60 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடிப் பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வேதாரண்யம், கரியாப்பட்டினம், செட்டிபுலம், மணக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 60 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால், நெற்பயிர்கள் அழுகி சேதமடைந்து வருகின்றன.

இதனால் பெரும் இழப்பை சந்தித்துள்ள விவசாயிகள், அரசு அறிவித்துள்ள ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் என்ற இழப்பீட்டை, ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், வெள்ள நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Exit mobile version