தென்மேற்கு பருவமழை மீண்டும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் மேற்கு பருவக்காற்றின் காரணமாக நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், ஒடிசா மற்றும் கங்கை சமவெளி பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி,கோவை மற்றும் தேனி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைப்பொழிவை பொருத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7செ.மீ மழையும், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 6செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்த வரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வடக்கு வங்ககடலில் வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்புள்ளதால், தென் மேற்கு பருவமழை மீண்டும் வலுப்பெறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version