தமிழக கேரள எல்லையோர மலைக்காடுகளில் மாவோயிஸ்ட்டுக்கள் ஊடுருவியதாக வெளியான ரகசிய தகவலையடுத்து, இருமாநில எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளப்பகுதி கிராமத்தில் துப்பாக்கிகளுடன் நுழைந்த நான்கு மாவோயிஸ்ட்டுக்கள் உணவு பொருட்களை வாங்கி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தேடப்பட்டு வரும் முப்பது மாவோயிஸ்ட்டுக்களில் பதிமூன்று பேர் கோவை மாவட்டத்தை அடுத்த தமிழக கேரள எல்லையோர வனப்பகுதியில் நடமாடி வருவதாக உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதி காடுகளில் நக்சல் தடுப்பு ரகசிய போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட்டுக்கள் பதுங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் கேரளாவின் அட்டபாடி வனப்பகுதியை ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம் மலைப்பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் மற்றும் கேரள பகுதிகளை இணைக்கும் சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளில் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இருமாநில எல்லையில் உள்ள மாங்கரை காவல்துறை சோதனை சாவடி மற்றும் வனத்துறையின் முள்ளி, பட்டிசாலை, மேல்பாவி சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. மலைக்கிராமங்களில் புதிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி மலைவாழ் மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.