IPL போட்டியில் விளையாட தேர்வான பானிபூரி விற்ற வீரர்

நடந்து முடிந்த ஐ.பி.எல். ஏலத்தில் ராஜஸ்தான் அணியால் 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார் இந்திய வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால். பானி பூரி விற்று வாழ்க்கை நடத்தி வந்த இந்த 17 வயது இளைஞருக்கு  ஐ.பி.எல்.லில் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

மூத்த வீரர்கள் பலரே விலைபோகாத இந்த ஐ.பி.எல். ஏலத்தில், 17 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஏலத்தில் எடுக்க பஞ்சாப், மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. கடைசியில் ராஜஸ்தான் அணி இவரை 2 கோடியே 40 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.
 
இவரது இந்த வளர்ச்சி இந்திய விளையாட்டுத்துறையினர் இடையே பெரும் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. உண்ண உணவிற்கு கூட வழியில்லாமல், பானிபூரி விற்று வாழ்க்கையை நடத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வளர்ச்சியும், அதன் பின் உள்ள உழைப்பும் இந்திய இளைஞர்களுக்கு வழிகாட்டக் கூடியவை.
 
உத்தரப்பிரதேச மாநிலம், பதோஹியில் ஏழைக் குடும்பம் ஒன்றில், கடந்த 2001-ம் ஆண்டு பிறந்தவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். உள்ளூரில் வேலை கிடைக்காததால் இவரது குடும்பம் பின்னர் மும்பைக்கு வந்தது. தனது இளம் வயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வத்தோடு இருந்த ஜெய்ஸ்வாலுக்கு குடும்பச் சூழல் மிகப் பெரிய தடையாக இருந்தது. இதனால் இவர் வேலைக்குப் போய் வீட்டுக்கு உதவிக் கொண்டே, மீத நேரத்தில் கிரிக்கெட் விளையாடினார்.
 
இவரது ஆட்டத் திறனைப் பார்த்த ஜுவாலா சிங் என்ற பயிற்சியாளர் இவருக்கு முழு வீச்சில் பயிற்சி அளித்ததுடன், இவரை வயதில் மூத்த வீரர்களுடன் களம் இறக்கி அழகு பார்த்தார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பெட் கட்டி விளையாடி அந்தத் தொகையில் வளர்ச்சியை எட்ட முயன்றார் ஜெய்ஸ்வால். இடையில் இவருக்கு இருந்த வேலையும் பறிபோக, காலையில் கிரிக்கெட், மாலையில் பானி பூரி வியாபாரம் என மாறியது ஜெய்ஸ்வாலின் வாழ்க்கை.
 
பள்ளி அளவிலான ஒரு கிரிக்கெட் போட்டியில் இவர் 319 ரன்களும், 13 விக்கெட்களும் எடுக்க அது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதனால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. அதில் இவர் 318 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருதைக் கைப்பற்றினார். 2019ல் நடந்த சர்வதேச இளையோர் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இவர்
273 ரன்களைக் குவித்தார்.
 
கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி, விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில், ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக இவர் இரட்டை சதம் அடித்தார். இந்தத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய இவர் மொத்தம் குவித்தது 564 ரன்கள்!. இந்த அசுர உழைப்புதான் ஜெய்ஸ்வாலை ஐ.பி.எல்.லை நோக்கி அழைத்து வந்திருக்கிறது. விரைவில் இவர் இந்திய அணியிலும் இடம்பெறுவார் என்பதே விளையாட்டு விமர்சகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version