தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது

சென்னை மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த கொள்ளையன் அண்டா சீனுவை ராயப்பேட்டை காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

மயிலாப்பூர், ஐஸ்அவுஸ், ராயப்பேட்டை, கோட்டூர்புரம், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் தொடர் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. கோட்டூர்புரம் ஏரிக்கரை சாலையில் திருமணத்திற்காக சென்ற செல்வி என்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற மர்ம நபர்கள், அதை பறிக்க முடியாததால் செல்வியை எட்டி உதைத்துவிட்டு சென்றனர்.

இதேபோல திருவல்லிக்கேணியில் சுதாதேவி என்பவரிடம் 5 சவரன் செயினை கொள்ளையர்கள் பறித்து சென்றனர். தேனாம்பேட்டை, மயிலாப்பூர், ராயப்பேட்டை போன்ற இடங்களிலும் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.

இதையடுத்து மயிலாப்பூர் துணை ஆணையர் மயில்வாகனன் மேற்பார்வையில் கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்ட போலீசார் முக்கிய குற்றவாளியான ராகேஷ் என்பவனை கைது செய்தனர்.

இதையடுத்து அண்டா சீனு என்பவரையும் தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் விரைந்து செயல்பட்ட தனிப்படை அதிகாரிகளுக்கு மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பாராட்டுக்களை தெரிவித்தார்.

Exit mobile version