நாட்டின் இயற்கை சொத்துக்களான கனிமங்கள், சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்படுவதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகாவில், கனிமங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்த நிறுவனத்துக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி, அந்நிறுவன உரிமையாளர் சுப்பாரெட்டி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இதுபோன்ற சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக எந்த கருணையும் காட்டாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். மேலும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கமளிக்க வேண்டும் என மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த விளக்கத்தின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.