வட சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான, வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னை நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த 2015 ம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இந்த சேவை தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. அந்த வகையில், வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக, விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு, சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
ஒட்டு மொத்தமாகவே, வடசென்னை முழுவதையும், மத்திய சென்னையுடன் மெட்ரோ ரயில் சேவை மூலம் இணைக்கும் வகையில், அடுத்த ஆண்டு திருவொற்றியூர் விம்கோ நகர் – வண்ணாரப்பேட்டை வரையிலான திட்டப்பணிகளும் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.
நாள்தோறும் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்துவரும் சென்னை மக்களுக்கு, மெட்ரோ ரயில் சேவை முழு பயன்பாட்டுக்கு வந்தால் மட்டுமே, போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுதலை கிடைக்கும்.