இந்தியாவில் தளவாட உற்பத்தி ரூ.1.86 லட்சம் கோடியாக இருக்கும்

2025ஆம் ஆண்டில் இந்தியாவில் பாதுகாப்புத் துறை தளவாட உற்பத்தி, ஒரு லட்சத்து 86ஆயிரம் கோடி ரூபாய் என்கிற அளவில் இருக்கும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பாதுகாப்புத் துறை தளவாடங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஆயுதங்கள் இறக்குமதி செய்வதைக் குறைக்கும் வகையில் இந்தியாவில் தயாரிப்போம் என்கிற திட்டத்தின்மூலம் உள்நாட்டிலேயே பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின்கீழ் 50 ஆய்வகங்களும், 41 படைக்கலன் தொழிற்சாலைகளும் உள்ளதாகத் தெரிவித்தார்.

தனியார் துறையில் பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிக்க 70 நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளதாகவும் ராஜ்நாத் குறிப்பிட்டார். 2025ஆம் ஆண்டில் இந்தியாவில் பாதுகாப்புத் துறைத் தளவாடங்கள் உற்பத்தி ஒரு லட்சத்து 86ஆயிரம் கோடி ரூபாய் என்கிற அளவுக்குப் பெருகி விடும் எனத் தெரிவித்தார். அடுத்த ஐந்தாண்டுகளில் 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பாதுகாப்புத்துறைத் தளவாடங்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். பாதுகாப்புத் தளவாட உற்பத்தி துறை மூலம் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Exit mobile version