கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, விரைவில் ரோபோ பயன்படுத்தப்பட உள்ளது. உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிய நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்களின் சடலங்களை எடுத்து செல்லும், மருத்துவமனை ஊழியர்களின் பாதுகாப்பும், கேள்விக்குறியாகும் நிலையில்தான் உள்ளது. புதுச்சேரியில் கொரோனா வைரசால் மரணம் அடைந்த நபரின் சடலத்தை, அச்சம் காரணமாக ஊழியர்கள் பள்ளத்தில் தள்ளியதும், ஆந்திராவில் கொரோனாவால் இறந்த நபரின் சடலத்தை ஜேசிபி இயந்திரத்தில் கொண்டு சென்றதும் இதற்கு சாட்சி. அதே நேரத்தில், கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களை கண்ணியமாக அடக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், திருச்சியை சேர்ந்த ஜாஃபி ரோபோட்ஸ் என்ற, தனியார் ரோபோடிக்ஸ் நிறுவனம், பள்ளி மாணவர்களுடன் இணைந்து ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த தானியங்கி ரோபோ 150 கிலோ எடை கொண்ட சடலத்தை தாங்க கூடிய வகையிலும், ஆம்புலன்ஸ்களில் எளிதாக ஏறி, இறங்கும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இடுகாடுகளில் சமதள மற்ற சாலைகளில் கூட எளிதாக செல்வது இந்த ரோபோவின் சிறப்பம்சம் ஆகும்.
ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி பணியாளர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, ஸ்ட்ரெச்சர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முழு வடிவமானது விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரோபோடிக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, மருத்துவமனைகளில் இந்த ரோபோவின் சேவை அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் சடலங்களை கையாளும் பணியாளர்களுக்கு, இந்த புதிய ரோபோ பெரும் வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது.