எனக்கு ரத்தத்தை கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தருகிறேன் என முழங்கி, இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்த வங்கம் தந்த சிங்கம் சுபாஷ் சந்திர போசின் 122வது பிறந்த தினம் இன்று. நாடே அவரது பிறந்ததினத்தை கொண்டாடிவரும் நிலையில், அவர் குறித்து ஒரு சிறு தொகுப்பு…
ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு மிகப்பெரிய தலைவலியாக விளங்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்திய இளைஞர்களுக்கு கனவாக வாழ்ந்த இந்த ஒற்றை மனிதனைப் பார்த்து ஆங்கில அரசு அரண்டது வரலாறு.
ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கில் பிரபல வழக்கறிஞருக்கு மகனாக 1897 ஜனவரி 23ல் பிறந்தவர் சுபாஷ் சந்திர போஸ். சிறந்த மாணவனாக திகழ்ந்த போஸ், ஐ.சி.எஸ். தேர்வில் இந்திய அளவில் 4வது இடத்தில் தேர்ச்சி பெற்றார். மிகப்பெரிய சர்க்கார் உத்தியோகம் கிடைத்த போதிலும், ஆங்கிலேயர்கள் முன்பு மண்டியிடவில்லை சுபாஷ் சந்திர போஸ். அந்தப் பதவியை துச்சமென தூக்கி எறிந்தார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலையே சுதந்திர போராட்டத்தில் நேதாஜியை தீவிரமாக ஈடுபட வைத்தது. இந்தியாவின் தாரக மந்திரமாக விளங்கிவரும் ஜெய் ஹிந்த் முழக்கத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் சுபாஷ்சந்திர போஸ்தான். இவருக்கு மரியாதைக்குரிய தலைவர் என்ற பொருளுடைய நேதாஜி என்ற பட்டப்பெயரை அளித்தவர் பிரபல கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்.
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் தமிழகத்தின் படைத்தளபதியாக லட்சுமி அம்மையார் விளங்கினார். அவரின் கொள்கைகளால் கவரப்பட்டு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்டோர் ராணுவ கட்டமைப்பில் முக்கிய பங்காற்றினர்.
நேதாஜியின் மரணத்தில் பல சர்ச்சைகள் நிலவி வருகிறது. கடந்த 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி இவர் பயணம் செய்த விமானம் பர்மோசா தீவிற்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டதாக ஜப்பானிய வானொலி அறிவித்தது. ஆனால் அவரது ஆதரவாளர்கள் இதை இறுதிவரை நம்பவில்லை. இறுதிவரை அவருடைய மரணம் மர்மமாகவே புதைந்துவிட்டது.
வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இந்திய சுதந்திரத்தையே மூச்சாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு மனிதனாக வாழ்ந்தவர் நேதாஜி. அவரின் மரணம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையிலும், அவரது சொல் மற்றும் செயல்கள் அனைத்தும் ஒவ்வொரு இந்தியனின் மூச்சிலும் கலந்துள்ளது.