தைப்பூச திருநாளான இன்று அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்றுக் கூறிய வள்ளலாரை பற்றி விரிவாக இந்த தொகுப்பில் காண்போம்..
1823 ஆம் ஆண்டு வடலூர் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகள் பிறந்தார்.
சிறு வயதில் தந்தையை இழந்த வள்ளலார் குடும்பத்துடன் சென்னைக்கு குடியேறினார். பின்னர் அண்ணனின் அரவணைப்பில் படித்து வந்த வள்ளலார் கல்வியில் நாட்டமின்றி இறை வழிப்பாட்டில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். ஒன்பதாவது வயதில் சொற்பொழிவுகளின் மூலம், ஆன்மீக பயணங்களை தொடங்கினார் வள்ளலார். இல்லறத்தில் நாட்டமின்றி, உள்ளம் கடவுளை நாடியது, சாதி, மத கடவுள்களை வழங்குவதை விடுத்து கடவுளை ஜோதி வடிவமாக வணங்கினார்.
சென்னையில் இருந்து சிதம்பரத்திற்கு வந்து, அங்கிருந்து வடலூர் அருகே உள்ள கருங்குழிக்கு வந்து கருங்குழியிலேயே தங்கி மக்களுக்கு, ஆன்மீகம், சித்த மருத்துவம் மற்றும் வாழ்வியல் நெறிமுறைகளை போதித்தார் வள்ளற்பெருமான்.
சன்மார்க்கம் என்ற கொள்கைகளான, ஜீவகாருண்யம், கொல்லாமை, புலால் மறுத்தல், போன்ற கொள்கைகளை மக்களிடையே பரப்ப 1867 ஆம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை வடலூரில் துவங்கி சன்மார்க்க நெறியை பரப்பினார்.
பசியை பினியாக கருதிய வள்ளலார், பசித்து வருவோருக்கு உணவு அளித்திட 1867ம் வருடம் சத்திய தர்மசாலையை நிறுவி, அன்னதானம் வழங்க அணையா அடுப்பை ஏற்றினார்.
இறைவனை அருட்பெருஞ்ஜோதி வடிவில் கண்ட பெருமானார், அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டிற்கென வடலூரில் 1872-ல் சத்திய ஞான சபையை நிறுவினார். உலகில் வேறு எங்கும் இல்லாத தனிபெரும் அமைப்பாக அனைவரும் பிராத்தனை செய்யும் முறையில் சத்திய ஞான சபையை வள்ளற்பெருமான் அமைத்தார்.
அதன் படி இன்றுவரை சத்திய ஞானசபையில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திருவருட்பா பாடல்களை பாடி அன்பர்கள் பிராத்தனை செய்கின்றனர். தொடர்ந்து பகல் 11.30 மணி முதல் 12 மணி வரையிலும், இரவு 7.30 மணி முதல் 8 மணி வரையிலும் பூஜை நடைபெற்று வருகிறது.
மாதம் தோறும், மாதப்பூசம் நடைபெறுவது வழக்கம், அதன்படி இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை ஆறு திரைகள் நீக்கி மூன்று முறை அருட்பெருஞ்ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வருட பூசம் தை மாதத்தில் ஏழு திரை விலக்கி தைப்பூசத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம்.
வடலூர் அருகே உள்ள மேட்டுகுப்பத்தில் சித்திவளாகம் என்னும் இடத்தை நிறுவி வாழ்ந்த வள்ளற்பெருமான் தான் வாழ்ந்த அறையிலேயே 1874-ஆம் ஆண்டு இறைவனுடன் ஜோதியாக கலந்தார்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்… என்று மனிதர்களுக்காக மட்டுமல்லாமல் பிற உயிர்களுக்காவும் மனம் உருகிய வள்ளலார், பசியால் வாடுவோரின் பசி தீர்க்க அன்று அவர் மூட்டிய தீ இன்றும் அணையா அடுப்பாக எரிந்து கொண்டிருக்கிறது.