ஏத்தாப்பூர் வியாபாரி கொலைக்கு கண்டனம்; ரூ.1 கோடி நிவாரணம் வழங்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சேலத்தில், போலீசார் தாக்கி உயிரிழந்த முருகேசன் குடும்பத்திற்கு, ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே, சோதனைச் சாவடியில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கி, முருகேசன் உயிரிழந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

சம்மந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட ஏத்தாப்பூர் வியாபாரி முருகேசன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.

முருகேசன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

சேலம் மாவட்டம் இடையாபட்டியில் காவலர்களால் வியாபாரி முருகேசன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை அனுமதிக்கக் கூடாது என ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நடு சாலையில் வைத்து வியாபாரியை அடித்துக் கொன்றது மிருகத்தனமானது, மன்னிக்க முடியாதது என கூறியுள்ளார்.

வியாபாரி முருகேசனை சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி தாக்கிய காட்சிகள் மனதை பதற வைப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

போலீஸ் தாக்கி வியாபாரி முருகேசன் உயிரிழந்தது தொடர்பாக, சேலம் சரக டிஐஜி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எஸ்.பாஸ்கரன், சேலம் சரக டிஐஜி 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version