பெரம்பலூரில் ஆளுங்கட்சியினர் மீது எதிர்க்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அவதூறு பரப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெரம்பலூரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இளம்பை தமிழ்செல்வன், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக வேப்பூரை சேர்ந்த வழக்கறிஞரும் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளருமான அருள் என்பவர் கடந்த 21ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து ஆடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
புகாரையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அருள் பொய்யான புகார் மற்றும் ஆடியோவை அளித்தது தெரியவந்தது. பெரம்பலூர் வழக்கறிஞர் நலச்சங்கம் மற்றும் அதிமுக மகளிர் அணியினர் சார்பில் காவல் ஆய்வாளரிடம் அளிக்கப்பட்ட புகாரில், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. தமிழ்செல்வன் மீது அருள் வேண்டுமென்றே புகார் தெரிவித்ததுள்ளதாக கூறப்பட்டது.
இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் அருளை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், போலியான ஆடியோவை அவரது உதவியாளர் கலையரசி உள்ளிட்டோரின் துணையுடன் அவர் உருவாக்கியது தெரியவந்தது. இதையடுத்து கலையரசியையும் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.