சபரிமலை கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக தனிச் சட்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோயில் தொடர்பாக ரேவதி நாள் ராமவர்ம என்பவர் தொடர்ந்த வழக்கில் கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது கேரள அரசின் வழக்கறிஞர் இந்த தகவலை வாய்மொழியாகத் தெரிவித்த நிலையில், அதனை நீதிபதி பதிவு செய்துகொண்டார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள அரசு வழக்கறிஞர் பிரகாஷ், தனிச்சட்டம் சபரிமலை கோயிலுக்கு மட்டுமின்றி திருவாங்கூர் தேவசம் போர்டின் கீழ் வரும் அனைத்து கோயில்களுக்கும் பொருந்தும் என்றும் சட்டம் தொடர்பான வரைவு மசோதா இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த சட்டம் சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைவதை பாதிக்காது என்றும் அவர் கூறினார்.