பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடை சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள வணிக சின்னம் மற்றும் புவிசார் குறியீடு அலுவலகத்தில் துணை பதிவாளராக பணியாற்றியவர், தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், உதவி பதிவாளராக பணியாற்றிய பெண் ஒருவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், தமிழக சமூக நலத்துறை அதிகாரி தலைமையில் ஆரம்பகட்ட விசாரணையை முடிந்துவிட்டதால், பதிவாளர் அமைத்த குழு சட்டவிரோதமானது என உத்தரவிட்டது.
மத்திய நிர்வாக தீர்ப்பாய உத்தரவை எதிர்த்தும், சமூக நலத்துறை அமைத்த விசாரணை குழு நடவடிக்கையை எதிர்த்தும் துணை பதிவாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, பணியின் போது, வேலை வாங்குவதற்காக வரம்பு மீறி திட்டினார் என்ற குற்றச்சாட்டு, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடை சட்டத்தின் கீழ் குற்றமாகாது எனக் கூறினர். மேலும், மத்திய நிர்வாக தீர்ப்பாய உத்தரவையும், சமூக நலத்துறை குழுவின் விசாரணை அறிக்கையையும் ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.
பொய்ப் புகார் அளிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடை சட்டத்தில் வழிவகை செய்யபட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதையை காக்க கொண்டுவரப்பட்ட சட்டத்தை கற்பனையான குற்றச்சாட்டுகளை கூறி, தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.