இந்திய மற்றும் உலக அளவில் பாராட்டுகளைப் பெற்றவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த பல மக்கள் நலத் திட்டங்கள், இந்திய அளவிலும், உலக அளவிலும் போற்றுதல்களைப் பெற்றுள்ளன. அவற்றில் சிலவற்றை, அவரது நினைவு நாளில் நினைவு கூர்வோம்…

தொட்டில் குழந்தை திட்டம்:

1992-ம் ஆண்டில், பெண் சிசுக்கொலைகளைத் தடுக்கும் வகையில், அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவால், தொட்டில் குழந்தைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாத சூழலில் உள்ள பெற்றோர், குழந்தையை அரசின் பாதுகாப்பில் ஒப்படைக்க வழிசெய்யப்பட்டது. இத்திட்டத்தால், தமிழகத்தில் பெண் சிசுக்கொலையின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம்:

ஏழை, எளிய மற்றும் நடுத்தரப் பெண்கள் சுயமாக முன்னேறி, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள, மகளிர் சுய உதவிக் குழுத் திட்டத்தின் மூலம், அவர்கள் கடனுதவி பெற திட்டம் வகுத்தார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. இந்தத் திட்டம் இந்திய அளவில் அதிக பெண் சுயதொழில் முனைவோர் உள்ள மாநிலமாக, தமிழகத்தை மாற்றியது.

மழைநீர் சேகரிப்புத் திட்டம்:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 2011-ம் ஆண்டில் கொண்டுவந்த ‘மழைநீர் சேகரிப்பு’த் திட்டம், உலக அளவில் பாராட்டுதல்களைப் பெற்றது. மழை நீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கிய இந்தத் திட்டத்தினால், தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. தற்போது தமிழகத்தைப் பின்பற்றி இந்தியாவின் பல மாநிலங்களும் இத்திட்டத்தை அமல்படுத்தி உள்ளன.

மாணவர் உதவித் திட்டங்கள்:

தொடக்கக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம், நோட்டு, புத்தகப் பை, காலணி, கணித உபகரணப் பெட்டி ஆகியவற்றையும், மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களையும், அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக் கணினியையும் அளித்து, கற்றலை ஊக்குவித்தார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. இதனால், தமிழகம் உயர் கல்வியில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகவும், இடை நிற்றலில் இந்தியாவின் கடைசி மாநிலமாகவும் ஆனது.

இப்படி, எண்ணற்ற திட்டங்களால், மக்களின் எண்ணங்களில் என்றுமே நிலையான இடத்தை பிடித்துள்ளார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா…

Exit mobile version