எரிமலை வெடிப்பால் உருவான உலகின் மிகப்பெரிய தீவு!!

உலகம் முழுவதும் அழகை விரித்திருக்கும் இயற்கை, நாடு மற்றும் மதம் கடந்து மனிதர்களை ஈர்க்கிறது. அவ்வாறு சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கொள்ளை கொள்ளும் கிரீஸ் நாட்டின் சாண்டோரினி தீவுகள் குறித்து இன்றைய உல்லாச உலகம் தொகுப்பில் காணலாம்…

எரிமலை வெடிப்புகளில் உருவான உலகின் மிகப்பெரிய தீவுகளில் சாண்டோரினி தீவுகளும் ஒன்று. 3 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான இந்த தீவுகளில், வீடுகளை விட சர்ச்சுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
Oia, Fira, மற்றும் Imerovigli உள்ளிட்ட அழகிய நகரங்கள் இந்த தீவில் அமைந்துள்ளன.

சைகிளேட்சின் முக்கியமான தீவாக கருதப்படும் சாண்டோரினியில் ஆண்டு முழுவதும் பலத்த காற்று வீசுகிறது. OIA கிராம மலைப்பகுதியில் உள்ள அடுக்கடுக்கான வீடுகள், கட்டிடங்களின் வடிவமைப்பு நேர்த்தியை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. நீலம், பிங்க் மற்றும் சிவப்பு வண்ணங்களின் கலவையாக காணப்படும் இந்த கிராமங்களில் வீசும் இதமான காற்று சுற்றுலாப் பயணிகளின் மனதை கொள்ளை கொள்கிறது. OIAவின் சூரிய உதயத்தை காண்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். எரிமலைப் பாறைகளை குடைந்து அமைக்கப்பட்டுள்ள வீடுகளும், கேப்டன் ஹவுசஸ் எனப்படும் பிரம்மாண்ட வீடுகளும் மிகவும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சாண்டோரினி தீவின் மற்றொரு வசீகரிக்கும் இடமாக அம்மெளடி துறைமுகம் உள்ளது. பாறைத் திட்டுகளுக்கு நடுவே அமைந்துள்ள கடலில் குளிப்பதற்கும், சுவையான உணவை ருசிப்பதற்கும் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.

திராட்சை விவசாயத்தில் முன்னணியில் இருக்கும் சாண்டோரினி தீவுகளில் ஒயின் தயாரிப்பே பிரதான தொழிலாக உள்ளது. ஆண்டு முழுவதும் பலத்த காற்று வீசுவதால் திராட்சைகளை கொடியில் வளர்க்க இயலாத சூழல் உள்ளது. இதனால் திராட்சை கொடிகளை தரையில் சுருள் வடிவத்தில் வளர்த்து விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு ஜனவரி, பிப்ரவரி, ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் வீசும் பருவக் காற்று மனிதர்களை தூக்கி வீசக்கூடிய அளவில் பலம் வாய்ந்ததாக இருக்கும்.

சாண்டோரினி தீவுகளில் சிவப்பு, வெள்ளை, கருப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் கடற்கரைகள் காணப்படுகின்றன. ரெட் பீச் எனப்படும் சிவப்பு கடற்கரை சாண்டோரினி தீவுகளின் அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எரிமலை குழம்புகளின் அடையாளங்களை இந்த கடற்கரையில் தெளிவாக காணலாம்.

சாண்டோரினி தீவுகளில் மனதை கொள்ளை கொள்ளும் அழகிய கடலில் படகு மற்றும் குதிரைகளில் பயணிப்பது தங்களது மறக்க முடியாத அனுபவமாக உள்ளதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version