உலகத் தரத்திலான புதிய சர்வதேச விமான நிலையம் ஒன்றைச் சீன அரசு அண்மையில் தொடங்கி உள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்தில் ஒரு மைல்கல் முயற்சியாகப் பார்க்கப்படும்.
உலகின் மிகப் பெரிய ஒற்றை முனைய விமான நிலையம் சீனாவில் தொடங்கப்பட்டு உள்ளது. சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கில் கடந்த 109 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த நான்யன் விமான நிலையம் உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக இருந்து வந்தது. இந்நிலையில், விமானப் போக்குவரத்தை மேலும் மேம்படுத்த, அதே பெய்ஜிங்கில் டாக்சிங் என்ற புதிய விமான நிலையத்தைச் சீன அரசு கடந்த 25ஆம் தேதி திறந்து உள்ளது.
இந்தப் புதிய விமான நிலையம் 97 கால்பந்து மைதானங்களின் பரப்பளவுக்கு இணையான பரப்பளவு கொண்டது. இதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2014ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 5 ஆண்டுக்காலமாக, 40 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்களின் உழைப்பில், ஆயிரத்து எழுநூறு கோடி அமெரிக்க டாலர் செலவில் டாக்சிங் விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த விமான நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு 7 கோடியே 20 லட்சம் பயணிகள் பயனடைய முடியும். அத்தோடு 20 லட்சம் டன் சரக்குகளையும் கையாள முடியும்.
5ஜி ஸ்மார்ட் டிராவல் சிஸ்டம் – என்ற தொழில்நுட்பத்தோடு தொடங்கப்பட்டு உள்ள டாக்சிங் விமான நிலையத்திற்கான தொழில்நுட்ப உதவிகளைச் சீன நிறுவனமான வாவே செய்துள்ளது. முக அடையாளத் தொழில்நுட்பம் மூலம் இந்த விமான நிலையம் இயங்குவதால் பயணிகள் எந்த ஆதாரங்களையும் காகித வடிவில் கொண்டுவரத் தேவையில்லை. இதனால் காகிதமற்ற விமான நிலையமாக டாக்சிங் விமான நிலையம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் பயன்பாட்டிற்காக விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னும், இது முழு வீச்சில் பயன்பாட்டிற்கு வரப் பல மாதங்கள் ஆகும். இங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள 112 விமான நிலையங்களுக்கு விமான சேவைகள் படிப்படியாகத் தொடங்கப்பட உள்ளன. தற்போது விமான சேவையில் உலகின் முன்னணி நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி 2022க்குள் முதல் இடத்தைப் பிடிக்கச் சீனா இலக்கு நிர்ணயித்து உள்ளது. அதற்கான முக்கிய நடவடிக்கையாக இந்தப் புதிய விமான நிலையத்தின் வருகை பார்க்கப்படுகின்றது.