சென்னை அருகே உள்ள தாம்பரத்தில், ஏரி-குளங்கள் நிரம்பி உள்ளதால், இந்தாண்டு மூன்று போகமும் விவசாயம் செய்யலாம் என அந்தப் பகுதி விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னை புறநகரான தாம்பரத்தை அடுத்து அகரம்தென், பதுவஞ்சேரி, நூத்தஞ்சேரி கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 700 ஏக்கர் நிலங்களில் இப்போதும் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்தாண்டு இறுதி வரை மழை ஏமாற்றிக் கொண்டே இருந்ததால், முதல்போகம் விவசாயம்கூட பொய்த்துவிடுமோ என அந்தப்பகுதி விவசாயிகள் கவலையோடு இருந்தனர். இந்தநிலையில், ஆண்டின் இறுதியில் பெய்த வடகிழக்குப் பருவமழை கைகொடுத்ததால், அகரம்தென் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி, மாடம்பாக்கம் ஏரிகள் நிரம்பின. அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்தது. அதனால்,முதல்போகம் நடவு செய்த நெற் பயிர்களும் செழித்து வளர்ந்துள்ளன. மேலும், தற்போது ஏரிகளில் உள்ள தண்ணீரை வைத்தே, இந்தாண்டு மூன்று போகமும் விவசாயம் செய்ய முடியும் என அந்தப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியோடு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.