கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் மத்திய நீர்வளத்துறை குழுவினர் 7 பிரதான மதகுகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி அணையின் இடதுபுற பிரதான மதகு ஒன்று கடந்த ஆண்டு உடைந்ததால் 2 கோடி ரூபாய் செலவில் மாற்றி அமைக்கப்பட்டது. உடைப்பு ஏற்பட்ட மதகு மாற்றப்பட்ட போதிலும் மீதமுள்ள 7 மதகுகள் பலவீனமாக இருப்பதால் கிருஷ்ணகிரி அணையில் 52 அடிக்கு பதிலாக 40 அடி வரை மட்டுமே நீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனிடையே, இந்த மதகுகளை மாற்றியமைக்க மத்திய நீர்வளத்துறையிடம் 22 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை புனரமைப்பு குழு தலைமைப் பொறியாளர் குல்ஷன் ராஜ் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு கேஆர்பி அணையில் நேரில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது தமிழக அரசு சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் மற்றும் நீர்வள திட்ட மேலாண்மை இயக்குனர் நடராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த ஆய்வின்போது மத்திய குழுவினருக்கு மதகுகள் உறுதித் தன்மை மற்றும் செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.