மணப்பாறை அருகே வழங்கப்பட்டு வரும், மன்னர் காலத்து மூலிகை சிகிச்சைமுறைக்கு, பொது மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அழக கவுண்டம்பட்டியில் வசித்து வருபவர் பழனிசாமி. விவசாயியான இவர் பழங்கால மூலிகை சிகிச்சை மூலம் தோல் வியாதிகளை குணப்படுத்தி வருகிறார். மன்னர் காலங்களில் நடைபெற்ற இதுபோன்ற சிகிச்சை முறைகள் தற்போது கேரளாவில் மட்டுமே ஒருசில இடங்களில் நடைமுறையில் உள்ளது.
இச்சிகிச்சைக்காக ஒரே நேரத்தில் இரண்டுபேர் வைத்தியம் பெரும் அளவிற்கு குழிவெட்டி, அதனுள் சிகிச்சை பெறுபவரை இறக்கி, மூலிகை புகை செலுத்தப்படுகிறது. 10 முதல் 20 நிமிடங்கள் வரை புகை சிகிச்சை பெற்ற பிறகு, மூலிகை சாறுகளை அருந்தி செல்கின்றனர். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மட்டுமே இந்த சிகிச்சை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்காக கட்டணம் வசூலிப்பதில்லை என கூறும் பழனிசாமி, பயனாளிகள் விருப்பத்துக்கேற்ப அளிக்கும் தொகையினை, கோவில் அன்னதானத்திற்கு வழங்கிவிடுவதாக கூறுகிறார்.