பத்து லட்ச ரூபாய் கேட்டுத் தன்னைக் கடத்தி விட்டதாகக் காதலனுடன் சேர்ந்து காதலி போட்ட நாடகம் காவல்துறையினரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வித்யா, அவர் சகோதரர் விக்னேஷ் ஆகிய இருவரும் சென்னையில் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். வித்யா தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், விக்னேஷ் சிறுசேரி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திலும் பணியாற்றி வருகின்றனர். வித்யா மலேசியாவில் உள்ள மனோஜ் என்கிற இளைஞரைக் காதலித்து வருகிறார். மனோஜின் சொந்த ஊர் காரைக்கால். கடந்த 10ஆம் தேதி காரைக்காலில் நண்பரின் திருமணத்துக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து பேருந்தில் சென்னை கோயம்பேடு திரும்பியதாக சகோதரர் விக்னேசிடம் முதலில் செல்பேசியில் தெரிவித்த வித்யா, சில மணி நேரங்களில் தன்னை யாரோ கடத்திவைத்துள்ளதாகவும், காப்பாற்றும்படியும் விக்னேசிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்துக் கடத்தல் கும்பல் தெலங்கானாவில் உள்ள வித்யாவின் தந்தை ஆறுமுகத்திடம் செல்பேசியில் தொடர்பு கொண்டு, மகள் உயிருடன் திரும்ப வேண்டும் என்றால் பத்து லட்ச ரூபாய் பணம் வேண்டும் என மிரட்டியுள்ளனர். இது குறித்து விக்னேஷ் கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் இணை ஆணையர் விஜயகுமாரி, துணை ஆணையர் முத்துசாமி ஆகியோரின் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கோயம்பேடு, விமான நிலையம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்துக் கோயம்பேட்டுக்கு வந்த வித்யாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வித்யாவும் அவர் காதலன் மனோஜும் சேர்ந்து கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்துக் கடலூரில் இருந்த மனோஜைக் கோயம்பேட்டுக்கு வரச் செய்தனர்.
வித்யா தனது காதலன் மனோஜ் கனடா செல்வதற்குப் பத்து லட்ச ரூபாய் தேவைப்பட்ட நிலையில் கூலிப்படையினர் தன்னைக் கடத்திவிட்டதாகவும், விடுவிக்க வேண்டுமானால் பத்து லட்ச ரூபாய் பணம் வேண்டும் எனவும் நாடகமாடி செல்பேசியில் மிரட்டியது தெரியவந்ததையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்திப் புழல் சிறையில் அடைக்கத் திட்டமிட்டுள்ளனர்.