கடத்த பயன்படுத்திய காரை நடுரோட்டில் விட்டுச்சென்ற கடத்தல்காரர்கள்

ஆத்தூரில், தொழிலதிபரை கடத்த பயன்படுத்திய காரை கடத்தல்காரர்கள் விட்டு சென்ற நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஹவுசிங் போர்டு, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் பங்குதாரராகவும், மல்லிய கரை பகுதியில் பெட்ரோல் பங்க்கும் நடத்தி வருகிறார். இந்நிலையில், மோட்டூர் தரைப்பாலம் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த சுரேஷை, 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றது. இதுகுறித்து ஆத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சுரேஷ்குமாரை கடத்திச் செல்வதற்காக பயன்படுத்திய ஸ்கார்பியோ காரை, சேலம் அரசு மருத்துவமனை முன்பு கடத்தல்காரர்கள் நிறுத்தி சென்றுள்ளனர். இதை தொடர்ந்து, தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, காரில் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்கள் சேகரிக்கப்பட்டது. கொள்ளையர்கள் காரை எடுத்து வந்த போது, அப்பகுதியில் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கிறதா என்பது குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version