முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிருப்பது கண்டிக்கத்தக்கது, என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கியுள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மஞ்சுமலை என்ற இடத்தில் 663 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு முனைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாகவும் வைகோ கூறியுள்ளார்.ஏற்கனவே கடந்த 2014 ஆம்ஆண்டு முல்லை பெரியாறு அணை வலுவாக இருப்பதாக கூறி உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது.
இந்நிலையில் புதிய அணை கட்டுவதற்கு கேரளா தொடர்ச்சியாக முயற்சி செய்வதும், அதற்கு மத்திய பாஜக அரசு, சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அனுமதி வழங்கி இருப்பதும் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி ஆகும் என்று கூறியுள்ளார். தமிழகத்திற்கு பச்சை துரோகம் இழைத்து வரும் மோடி அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது எனக் குறிப்பிட்டுள்ள வைகோ, அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.