பழனியில் கந்தசஷ்டி திருவிழா காப்புக்கட்டுதலுடன் விமரிசையாக தொடங்கியது.
அறுபடை வீடுகளில் 3 படைவிடாக கருதப்படும் பழனி கோயிலில் கந்தசஷ்டி விழா விமரிசையாக தொடங்கியது. உச்சிகால பூஜை முடிந்து திருஆவினன்குடி கோயிலில் குழந்தை வேலாயுதசாமிக்கு காப்பு கட்டப்பட்டது. அதேநேரத்தில் பழனி மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமி மூலவர் மற்றும் உற்சவருக்கு காப்பு கட்டப்பட்டது.
தொடர்ந்து விநாயகர், துவாரபாலகர், நவவீரர்கள், மயில், கொடிமரம் ஆகியவற்றிற்கும் காப்பு கட்டப்பட்டது. காப்பு கட்டுதலை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களுக்கும் காப்புகட்டிக்கொண்டு சஷ்டி விரதத்தை தொடர்ந்தனர். ஏழு நாட்கள் சஷ்டி விரதம் மேற்கொண்டு, சூரசம்ஹாரம் நடைபெறும் நவம்பர் 2ம் தேதி தண்டு விரதம் மேற்கொண்டு விரதத்தை நிறைவு செய்வர். நவம்பர் 3ம் தேதி சண்முகர்-வள்ளி,தெய்வானைக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவடைகிறது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோயில் மலை மேல் உள்ள முருக பெருமானின் 6வது படை வீடான சோலைமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா விமரிசையாக தொடங்கப்பட்டது. இதனையொட்டி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக முருகப் பெருமான் ஒவ்வொறு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் உலா வருகிறார். முதல் நாளில் அன்னவாகன உலா வந்து முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வரும் சனிக்கிழமை சூரசம்ஹாரமும், ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யான வைபவமும் சிறப்பாக நடைபெற உள்ளது.