கல்கி ஆசிரமம் பற்றியும், அதன் நிறுவனர் பற்றிய தொகுப்பு

கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான இடங்களில் தொடர் ரெய்டு நடந்து வரும் நிலையில், அந்த ஆசிரமம் பற்றியும், அதன் நிறுவனர் பற்றிய இந்த தொகுப்பு..

வேலூர் குடியாத்தம் அருகே உள்ள நத்தம்தான் கல்கி அல்லது ஸ்ரீ பகவானின் சொந்த ஊர். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் விஜயகுமார் .. இவரது தந்தை ரயில்வே பணியில் இருந்தவர். கல்கிக்கு 6 வயது இருக்கும்போது குடும்பத்துடன் சென்னைக்குக் குடிபெயர்ந்துவிட்டனர். டான் பாஸ்கோவில் பள்ளி படிப்பு, வைஷ்ணவா கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவர் ஆரம்ப காலகட்டத்தில் எல்.ஐ.சி ஏஜென்டாகப் பணியாற்றினார். அந்த நாள்களில் தத்துவஞானி ஜே.கே-வின் கருத்துகளில் தீவிரப் பற்று கொண்டு அவரது தியானக் கூட்டங்களுக்குத் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார்.

1984 ல் ஆந்திராவில் பள்ளி ஒன்றை துவக்கிய விஜயகுமார், மாணவர்களுக்கு ஆன்மிகத்துடன் கூடிய கல்வியை புகட்டி வந்தார்.. அவ்வப்போது மாணவர்களுக்கு ஆன்மிக ரீதியாக சில பிம்பங்கள் தோன்றுமாம். யாரோ ஒருவர் குதிரை மீது அமர்ந்து வருவது போன்ற காட்சிகள் அவ்வப்போது மாணவர்களுக்கு தோன்றி மறைந்துள்ளது.. இது அனைத்தும் விஜயகுமாரின் ஒரு மேம்பட்ட சக்தியால் தான் என மாணவர்கள் நம்பத்துவங்கினர். இதையடுத்து விஜயகுமார் கல்கி பகவான் மற்றும் ஸ்ரீ பகவான் என அழைக்கப்பட்டார்..

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள நேமம் கிராமத்தில் கல்கி ஆசிரமத்தை நடத்த துவங்கினார் கல்கி.. இந்த ஆசிரமத்துக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா எனப் பல்வேறு மாநிலங்களிலிருந்து மக்கள் வருவது வழக்கம். விஜயகுமாரின் ஒவ்வொரு செயலும் வித்தியாசமாக இருந்ததால் மிகவும் பிரபலமடைந்ததார்.

சினிமா, அரசியல் பிரபலங்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் இவருக்கு பக்தர்களாக உள்ளனர். பின்னாளில் அசுர வளர்ச்சிகண்ட இவரது ஆசிரமம் நாடு முழுவதும் பல்வேறு கிளைகளைத் தொடங்கியது. சென்னையில் மட்டும் 20 இடங்களில் கிளைகள் உள்ளன.

ஆந்திராவில் மட்டும் 5,000 ஏக்கர், தமிழ்நாடு, கர்நாடகா என அத்தனை மாநிலங்களிலும் கோடிக் கணக்கில் சொத்துகள் இருக்கும் நிலையில் ஒன்னெஸ் யூனிவர்சிட்டி என்ற பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றையும் நடத்தி வருகிறார் கல்கி பகவான்.

உலகம் முழுவதும் அமைதியைப் பரப்பும் நோக்கில் இந்தப் பல்கலைக்கழகத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் வேளையில், கல்கி பகவான் மகன் கிருஷ்ணா, லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு கம்பெனி உள்பட இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். பெங்களூருவில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமான பிசினஸ் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களைக் குறிவைத்தே தற்போது அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

 

Exit mobile version