வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு 4 நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் ஏற்றுக் கொள்வார்களா? என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோரை போல தமிழகத்தை சேர்ந்த ஏராளமான தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் இருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்துள்ளனர். அவர்களும், தங்கள் காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து வழக்கு தொடர்ந்து, அவை நிலுவையில் இருந்து வருகின்றன. இதில் சில வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு, 4 நாட்கள் காலதாமதமாக, அரசு, ஊதியம் வழங்கினால் ஏற்றுக் கொள்வார்களா? என்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கேள்வி எழுப்பினார். வரி வசூலிக்கும் பணியில் உள்ள அதிகாரிகள் முறையாக வரி வசூலிக்கவில்லை என்றால், அரசை நடத்த முடியாது எனவும் நீதிபதி வேதனை தெரிவித்தார். இதை தொடர்ந்து, வெள்ளிக்கிழமைக்குள் சொகுசு கார் நுழைவு வரி தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் எண்களையும், வணிகவரித்துறை கமிஷனர் தாக்கல் செய்ய, அவர் உத்தரவிட்டார். மேலும் அந்த வழக்குகள் அனைத்திலும் ஆகஸ்ட் 16ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.