பறை இசை என்றாலே ஒதுங்கி நிற்கும் காலம் மெல்ல மெல்ல கரைந்துவருகிறது. அந்த கரைசலுக்கு காரணம் `சவுண்டு மணி’ போன்ற சிலர் பறையிசை காதலர்கள் தான். தனக்கு எதிரேயிருந்த எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து சாதனை நாயகனாக நம் கண் முன் நிற்கிறார் 21 வயதேயான சவுண்டு மணி. வெறும் கேள்வி ஞானம் மூலமாக மட்டும் 45 இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டேன் என்று அவர் சொல்லும்போது, நிச்சயமாக நம்மால் நம்ப முடியவில்லை.
இது தொடர்பாக அவரிடம் பேசினோம். “ஈரோடு மாவட்டம் தான் என்னுடைய சொந்த ஊர். அப்பா நவநீத கிருஷ்ணன். டிரைவராக பணிபுரிந்துவருகிறார். அம்மா பரிமளா. வறுமையை பின்னணியாக கொண்ட குடும்பத்தையிலிருந்து வளர்ந்தேன். பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே கோயில் திருவிழாக்களில் பறை வாசிப்பை பார்த்திருக்கிறேன். அப்போதிலிருந்து அதன் மேல் ஓர் ஈர்ப்பு. பறை வாசிப்பவர்கள் பறையை வைத்துவிட்டு, தண்ணீர் குடிக்க செல்லும்போது, பறையை தொட்டுப்பார்ப்பேன். பறை மீதான காதல் எப்படி உருவானது என தெரியவில்லை. சிறுவனாக இருக்கும்போதே தொற்றிக்கொண்டது.
அப்போது நான் 10ம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன். வகுப்பில் தாளம்போட்டுக்கொண்டிருந்தேன். அப்போது உள்ளே வந்த ஆசிரியர், `என்னடா பறையன் மாதிரி வாசிக்கிற’என்று கேட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த வயதிலே எனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது. பறையிசை பிடிக்கும் அவ்வளவுதான். அப்பாவிடம் கேட்டபோது, இதை நாம் வாசிக்ககூடாது என தடுத்தார். குறிப்பிட்ட சமூகத்திற்கான இசைக்கருவியாக அதை பாவித்தார். அப்போதே இந்த ஸ்டீரியோ டைப்பை உடைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
கேள்வி ஞானத்தின் மூலம் கற்றுக்கொண்டேன். பணம் கொடுத்து வகுப்புக்குச் சென்று கற்றுக்கொள்வதற்கான சூழல் அப்போது இல்லை. இன்று 45 இசைக்கருவிகளை வாசிக்கிறேன். பல விருதுகளை வாங்கியிருக்கிறேன். 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு கோடை விடுமுறை நாட்களில் கலைத்தாய் அறக்கட்டளை சிலம்பம் கற்றுகொடுத்தார்கள். சிலம்பம் கற்றுக்கொள்வதாக நுழைந்து, பறையிசையை கற்றுகொள்ளலாம் என நினைத்தேன். ஆரம்பத்தில் அங்கிருந்த சிலர், `சிலம்பம் தானே கற்றுகொள்ள வந்தாய்’ என்று கூறிவிட்டனர். சில நாட்களுக்குப்பிறகு அங்கிருந்த இசைக்குழுவினருடன் நெருங்கி பழகி அதன் மூலம் பறையிசை அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் நெகிழி பறையை தான் வாசிச்சேன். தோல் பறை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் பறையை வாசிக்க கூடாது என்பதில் அப்பாவை விட, அம்மா தீர்க்கமாக இருந்தார். 2017ம் ஆண்டு சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் ஒலிப்பதிவு பொறியாளருக்கான பிரிவில் சேர்ந்தேன்.
அங்கு ஹாஸ்டலில் தங்கியிருந்தபோது தான் பறை குறித்து தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போது சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் எனக்கு ஊக்கம் கொடுத்து ஆறுதல்படுத்தியது கவிப்போம் குழுவினர் தான். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பயணம் செய்து நிறைய கற்றுக்கொண்டேன். பறையிசை குறித்த அறிவை வளர்த்துக்கொள்ள எனக்கு அது பெரும் உதவியாக இருந்தது. 2019ம் ஆண்டு இலங்கை தமிழரான அந்தோணி (வெர்சாய் தமிழ்சங்கத்தின் தலைவர்) என்பவர் மூலம் பிரான்ஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்து. அங்கு சென்று, பறை, பெரிய கம்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட மற்ற இசைக்கருவிகளையும் சொல்லி கொடுத்தேன். பறையிசை வாசிக்கும் ஒருவனால் விமானத்தில் அதுவும் ஃபர்ஸ்ட் கிளாஸில் அமர்ந்து போக முடியும் என்பதை நான் நிரூபித்துக்காட்டினேன். இந்தியா திரும்பியதும், ஊடக வெளிச்சம்பட்டது. பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றேன்.
சிலப்பதிகாரம், பஞ்சமரபில் உள்ள இசைக்கருவிகளை மீட்டெடுத்திருக்கிறேன்” என தனது பயணத்தை விவரிக்கிறார் “சவுண்டு” மணி. Sound mani – Parai artist & trainer என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் மணி, சேனலை தொடங்கிய 8 மாதத்தில் 25 ஆயிரம் சப்ஸ்கிரைபர்ஸை அள்ளியிருக்கிறார். பறையிசையின் மகிமை குறித்து பேசும் மணி, “செத்தவன் காதோரம், செவிட்டி அடிக்கையிலே சத்தம் கேட்டு எழல சவக்குழிக்கு ஆள் அனுப்பு” என்ற பழமொழி போதுமானது. பறையின் உன்னதத்தை உணர்த்த. அந்த காலத்தில் ஒருவர் இறந்துவிட்டாரா என்பதை உறுதிபடுத்த மூன்று வகையான சோதனைகளை மேற்கொள்வார்கள். அதில் இறுதியானது பறைதான். இறந்தவரின் காதுக்கு அருகே பறையை அடித்து அவர் கை கால் அசையவில்லை எனில் சவக்குழிக்கு அனுப்பிவிடுவார்கள். உண்மையில் பறை என்பது மருந்து. மன நிம்மதிக்கான ஆயுதம். நான் இப்போது கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலமாக இந்தோனேஷியா, ஓமன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச்சேர்ந்தவர்களுக்கு பறை இசைவாசிப்பு தொடர்பாக வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் அந்த இளம் இசை வித்தகர்!
-கலிலுல்லா