பங்களிப்பு ஓய்வூதிய நிதி குறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தவறான பரப்புரையை செய்து வருவதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்படி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தில் 10 சதவிகிதம் பிடித்தம் செய்யப்பட்டு அதற்கு ஈடாக 10 சதவிகித தொகையை தமிழக அரசு வழங்கி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிடித்தம் செய்யப்படும் பங்களிப்புத்தொகை, அதற்கு ஈடான அரசின் பங்களிப்புத் தொகை மற்றும் அதற்கான வட்டித் தொகை முறையாக சேர்க்கப்படுகிறதா என்பது மத்திய கணக்கு ஆய்வாளரால் சரி பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில், கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு, அரசின் பங்களிப்பு மற்றும் வட்டியுடன் சேர்த்து 21 ஆயிரத்து 820 புள்ளி 90 கோடி ரூபாய், பொதுக் கணக்கில் இருப்பு வைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்படுவதாக அரசு விளக்கமளித்துள்ளது. இதற்கு 8 சதவிகித வட்டி கணக்கிடப்பட்டு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கணக்கில் வரவு வைக்கப்படுவதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.