மாத்திரைக்குள் சிறிய கம்பி இருந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏராண்துறை கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாண்டி. இவரது மனைவி சக்திக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து காய்ச்சலால் அவதிப்பட்ட அவர், அருகில் உள்ள ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கியுள்ளனர். தொண்டை வலியும் அதிகமாக இருந்ததால் மாத்திரையை இரண்டாக உடத்து சாப்பிட முயன்ற போது, அதற்குள் சிறிய கம்பி இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சக்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தயாரிப்பு மாத்திரைகள் அனைத்தையும் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என தமிழக மருத்துவப் பணிகள் கழக நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.