உடன்குடியில் அனல் மின் நிலையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் அனல் மின் நிலையம் அமைந்தால், அங்கிருந்து வெளியேற்றப்படும் வெந்நீர் கடலில் கலப்பது மூலம் மீன் மற்ற உயிரினங்கள் அழிந்துபோதும் என்றும், இதனால் பல மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.
எனவே, அனல் மின் நிலையம் அமைக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரம் என்பதால் மனுதாரர் பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம் என நீதிபதிகள் கூறினர். இதை தொடர்ந்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் கூறியதை அடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.