இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் தொடர்பான வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானின் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாத செயல்களை தூண்டியதாகவும் குற்றம்சாட்டி, கடந்த 2017ம் ஆண்டு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த 2017 மே 18ஆம் தேதி 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. வழக்கை விசாரித்த இந்த அமர்வு, ஜாதவின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் இந்த விசாரணை மீண்டும் நடைபெற்று வருகிறது. குல்பூஷன் ஜாதவின் தூக்கு தண்டனையை ரத்து செய்து அவரை விடுவிக்க வேண்டும் என்று இந்த விசாரணையின்போது இந்தியா வாதாடியது.
இந்த அமர்வில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் நீதிபதிக்கு கடந்த திங்களன்று மாரடைப்பு ஏற்பட்டது.இந்த நீதிபதிக்கு பதிலாக மற்றொரு நீதிபதியை நியமிக்கும்வரை வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்த கோரிக்கையை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.